மாவட்ட செய்திகள்

மதுரை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு,கிடு உயர்வு + "||" + The price of flowers in the Madurai market has gone up

மதுரை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு,கிடு உயர்வு

மதுரை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு,கிடு உயர்வு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மதுரை மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு,கிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.1200-க்கு விற்பனை ஆனது.
மதுரை,
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மதுரை மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு,கிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.1200-க்கு விற்பனை ஆனது.

மதுரை மல்லிகை

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் எலியார்பத்தி, பாரப்பத்தி, வலையன்குளம், குசவன் குண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூக்கள் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கோவில்களில் வழிபாடு நடத்தவும், திருமண நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மல்லிகைப்பூக்களின் விலையும் படிப்படியாக உயர தொடங்கியது. அதன்படி, கடந்த வார தொடக்கத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது.

இந்தநிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.900 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுபோல், ஒரு கிலோ பிச்சி ரூ.600, முல்லை ரூ.800, கனகாம்பரம் ரூ.900 என மற்ற பூக்களின் விலையும் சற்று அதிகமாக இருந்தது.

மக்கள் கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூஜைகள் செய்வதற்காக பூக்கள் வாங்கவும் பொதுமக்கள் நேற்று அதிக ஆர்வம் காட்டி மார்க்கெட்டுகளில் குவிந்தனர். இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுபோல், பழைய மார்க்கெட் இருந்த இடத்திலும் நேற்று அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. அங்கும் சிறு, சிறு வியாபாரிகள் பூ வியாபாரம் செய்தனர்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பூக்களை வாங்குவதிலும் பொதுமக்கள் தங்கள் ஆர்வத்தை குறைத்துள்ளனர். இதனால், எதிர்பார்த்த அளவில் பூக்கள் விற்பனையாகவில்லை என வியபாரிகள் தெரிவித்தனர்.

காய்கறி விலையும் அதிகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை காய்கறி மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகமாக இருந்தது. குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் விலை அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது. காய்கறி மார்க்கெட்டுகளிலும் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வந்திருந்தனர்.
=======