ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம்


ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 10 Sep 2021 5:58 PM GMT (Updated: 10 Sep 2021 5:58 PM GMT)

ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம்-1500 இடங்களில் நாளை நடக்கிறது

மதுரை
ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் 1,500 இடங்களில் நாளை நடக்கிறது.
தடுப்பூசி
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று வரை நாடு முழுவதும் 72 கோடியே 94 லட்சத்து 10 ஆயிரத்து 533 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அதில் 2 டோஸ்களை 17 கோடியே 27 லட்சத்து 35 ஆயிரத்து 547 பேரும், முதல் டோஸ்சினை 55 லட்சத்து 66 ஆயிரத்து 74 ஆயிரத்து 986 பேரும் போட்டு உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 3 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 944 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். அதில் 2 டோஸ்களை 74 லட்சத்து 80 ஆயிரத்து 491 பேரும், ஒரு டோஸ்சினை 2 கோடியே 93 லட்சத்து 24 அயிரத்து 453 பேரும் போட்டு உள்ளனர்.
மத்திய அரசின் கணக்கீட்டின்படி, மதுரை மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 3 ஆயிரத்து 953 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அதில் 2 டோஸ்களை 2 லட்சத்து 79 ஆயிரத்து 928 பேரும், முதல் டோஸ்சினை 10 லட்சத்து 24 ஆயிரத்து 25 பேரும் போட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரத்து 384 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அதில் 6 லட்சத்து 29 ஆயிரத்து 822 பேரும், பெண்கள் 6 லட்சத்து 73 ஆயிரத்து 957 பேரும், திருநங்கைகள் 174 பேரும் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
வயது வாரியாக கணக்கிட்டால் 60 வயதிற்கு மேல் 2 லட்சத்து 45 ஆயிரத்து 708 பேரும், 45 வயதில் இருந்து 60 வயது வரை 3 லட்சத்து 84 ஆயிரத்து 516 பேரும், 18 வயது முதல் 44 வயது வரை 6 லட்சத்து 73 ஆயிரத்து 729 பேரும் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
சிறப்பு முகாம்
கடந்த காலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருந்தது. எனவே ஆரம்பத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அதன்பிறகு மற்றவர்களுக்கு போடும் பணி தொடங்கியது. அதுமட்டுமின்றி மதுரையில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் தான் தடுப்பூசி போடும் நிலையும் இருந்தது. ஆனால் தற்போது தடுப்பூசி அதிகளவு கையிருப்பு உள்ளது. இருப்பினும் பொதுமக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்து உள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்குடன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட 1,500 இடங்களில் சிறப்பு முகாம் நாளை (12-ந் தேதி) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் அனிஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்று ஏற்படாமல் இருக்க பொது மக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுகாதார மையங்கள்
தொற்று பரவலின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள தேர்தல் வாக்குசாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் என 1500 இடங்களில் 18 வயது நிரம்பிய அனைத்து நபர்களுக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயது நிரம்பியவர்களும், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்களும், இந்த முகாமில் ஆதார் அட்டையுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story