கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்


கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்
x
தினத்தந்தி 10 Sep 2021 5:58 PM GMT (Updated: 2021-09-10T23:28:11+05:30)

எழுமலை அருகே கிணற்றுக்குள் வாலிபர் பிணம் கிடந்தது. அவரது சாவில் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலம்பட்டி
எழுமலை அருகே கிணற்றுக்குள் வாலிபர் பிணம் கிடந்தது. அவரது சாவில் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகராறு
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது மல்லப்புரத்தை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ஈஸ்வரன்(வயது 21). கட்டிட தொழிலாளி. கடந்த 4-ம் தேதி இதே ஊரை சேர்ந்த செல்லத்துரை மகன் காளிராஜ்(23) என்பவர் ஊருக்குள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரனுக்கும் காளிராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
இதனை தொடர்ந்து காளிராஜ் எம்.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் ஈஸ்வரன் தரப்பை சேர்ந்த 10 பேர் மற்றும் காளிராஜ் ஆகியோரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இந்த விசாரணைக்கு ஈஸ்வரன் உள்பட 3 பேர் வரவில்லை என கூறப்படுகிறது. 
சாலை மறியல்
இந்த நிலையில் எம்.கல்லுப்பட்டி எழுமலை சாலை அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் ஈஸ்வரன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த எம்.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கிணற்றில் அழுகிய நிலையில் ஈஸ்வரன் உடல் காணப்பட்டது. 
இதையடுத்து ஈஸ்வரன் உறவினர்கள் அவரின் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவரை கொலை செய்து விட்டதாகவும் கூறி பிரேதத்தை கிணற்றுக்குள் இருந்து எடுக்க விடாமல் தடுத்ததுடன் எழுமலை- எம்.கல்லுப்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு
மறியலில் ஈடுபட்ட மக்களிடம் உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லூ, எழுமலை இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய கஜேந்திரன், மணிமொழி, சுப்பிரமணி உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதைதொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் எழுமலை-எம்.கல்லுப்பட்டி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஈஸ்வரன் பிரேதத்தை தீயணைப்புத்துறை உதவியுடன் போலீசார் மீட்டனர். மேலும் அதே இடத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் தேன்மொழி தலைமையிலான மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ஈஸ்வரன் உடல் மல்லப்புரத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
 இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story