மதுரையில் 2 வாலிபர்கள் கொலை


மதுரையில் 2 வாலிபர்கள் கொலை
x
தினத்தந்தி 11 Sept 2021 1:03 AM IST (Updated: 11 Sept 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டனர்

மதுரை
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டனர்.
மணல் கொட்டியதில் தகராறு
மதுரை எச்.எம்.எஸ். காலனி புதுவாழ்வுநகர் பகுதியில் சித்த வைத்திய சாலை வைத்திருக்கும் டாக்டர் கணேசன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு காவலாளியாக கணேசன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். மேலும் அந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஆசாரி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். புது வீட்டிற்கு தேவையான மணல், ஜல்லிகளை அந்த பகுதியில் கொட்டி வைத்துள்ளனர்.
அதில் பக்கத்து வீட்டின் முன்பு கொட்டப்பட்டு இருக்கும் மணல்களால் கணேசனுக்கு வாகனங்களை வீட்டிற்குள் ஏற்றுவதற்கு தொந்தரவாக இருந்துள்ளது. இதுகுறித்து அவர் காவலாளி கணேசனிடம் அடிக்கடி முறையிட்டுள்ளார். நேற்று மதியம் இதுதொடர்பாக அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆசாரி கணேசன் காவலாளியை பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
 குத்திக்கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த காவலாளி தனது மகன் கவுதமிற்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் நண்பர்கள் 10 பேருடன் சம்பவ இடத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டார். அதில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஆசாரி கணேசனின் மகன் அருண்பிரகாஷ் கத்தியால் குத்தியதில் கவுதம் நண்பர் விக்னேஷ் (21) என்பவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆசாரி கணேசன், அவரது மகன் அருண்பிரகாஷ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு வாலிபர் கொலை
மதுரை கருப்பாயூரணி அருகே சக்கிமங்கலம் கல்மேடு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(வயது 30). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார். வேலைபார்த்த நிறுவனத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுங்களுடன் அவரை வழிமறித்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த கும்பல், இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக சிலைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த பாலச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள. தடயங்களையும் சேகரித்தனர். மேலும் கொலை நடந்த பகுதியில் உள்ள  கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்து ெசய்து வருகிறார்கள். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

Next Story