கோவையில் நீட் தேர்வை 6057 பேர் எழுதுகிறார்கள்


கோவையில் நீட் தேர்வை 6057 பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 11 Sep 2021 4:19 PM GMT (Updated: 11 Sep 2021 4:19 PM GMT)

கோவையில் நீட் தேர்வை 6057 பேர் எழுதுகிறார்கள்

கோவை

கோவை மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வை இன்று (ஞாயிற்றுக்கிழமை)  6,057 பேர் எழுதுகிறார்கள்.

நீட் தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற் கான நீட் என்ற நுழைவுத்தேர்வு மத்திய அரசின் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்பட்டு வந்தது. 

ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தாமதமாக நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் தாமதமாக நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக் கிழமை) மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் நீட் தேர்வை 6,057 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதில் கே.ஐ.டி.- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி, கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி, 

ஆதித்யா கல்லூரி, ரத்னவேல் சுப்பிரமணியம் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் தலா 960 மாணவ-மாணவிகளும், சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் 417 பேர், கற்பகம் அகாடமி பள்ளியில் 960 பேர், நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியில் 840 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

தடுப்பு நடவடிக்கை

கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நீட் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக கோவையில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் நேற்று கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது.

 இது குறித்து நீட் தேர்வு கண்காணிப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்குவதால் தேர்வு மையத்துக்குள் காலை 11 மணி முதல் மாணவ -மாணவிகள் அனுமதிக் கப்படுவார்கள். 

கூட்டம் கூடுவதை தவிர்க்க ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரப்படி தேர்வு அறைக்கு வர வேண்டும். மாணவ- மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது.

கொரோனா பாதித்தவர்களுக்கும் அனுமதி

கைகளை கிருமி நாசினியால் சுத்தப்படுத்திய பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

 உடல் வெப்பநிலை  அதிகம் இருப்பவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 


இதன் மூலம் அந்த மாணவ- மாணவிகளை தனி வாகனத்தில் அழைத்து வந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தனி அறையில் வைத்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும்,

கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே மாணவர்கள் படிவத்தில் கையொப்பம் இட வேண்டும்.

புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட், அரசு வழங்கிய அடை யாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் கிருமிநாசினி மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை கொண்டுவர வேண்டும். 

போலீஸ் பாதுகாப்பு

தேர்வு மையத்துக்குள் மின்னணு பொருட்கள் கொண்டுவர அனுமதி இல்லை. முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்து வரக் கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். 

அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது பறக்கும் படை அதிகாரிகளும் அவ்வப்போது தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். நீட் தேர்வையொட்டி கோவையில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story