வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை, 3 லட்சம் திருட்டு


வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை,  3 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 11 Sep 2021 5:11 PM GMT (Updated: 2021-09-11T22:41:13+05:30)

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை, 3 லட்சம் திருட்டு

கோவை

கோவையில் பூட்டை உடைக்காமல் கதவை திறந்து வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

வியாபாரி வீடு

கோவை அம்மன்குளம் அருகே அம்மன் நகரில் வசித்து வருபவர் ரத்தினபாண்டி (வயது58). 

இவர் வீட்டின் முன்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த வீட்டில் மேல் தளத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ரத்தினபாண்டி வீட்டை பூட்டி விட்டு, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சென்றார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் ரத்தினபாண்டி யின் வீட்டு இரும்புக்கதவை தாண்டி மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்த னர். 

அவர்கள், வீட்டு முன்பக்க கதவு பூட்டை உடைக்காமல், தாழ்ப் பாள் ஸ்குருக்களை கழற்றினர். பின்னர் அவர்கள் கதவை ஓங்கி தள்ளி திறந்து வீட்டுக்குள் சென்றனர்.

நகை, பணம் திருட்டு

இதையடுத்து வீட்டுக்குள் இருந்த பீரோ வை உடைத்து திறந்து உள்ளே இருந்த ரூ.3 லட்சம் பணம், 10 பவுன் தங்கநகையை மர்ம ஆசாமிகள் திருடி விட்டு தப்பி சென்றனர்.

அந்த வீட்டின் மாடியில் குடியிருப்பவர்கள் நேற்று காலை பார்த்த போது ரத்தினபாண்டியின் வீட்டில் பூட்டு பூட்டியபடி கதவில் தொங்கிக் கொண்டு இருந்தது. ஆனால் அந்த கொண்டியை மாட்டும் பகுதி உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. 

இது பற்றி அவர்கள், கோவையில் வசித்து வரும் ரத்தினபாண்டியின் தம்பி பகவதி பாண்டிக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த பணம், நகை திருட்டு போனது தெரிய வந்தது.

விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராணி, அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தார்.
மாடியில் வசிப்பவர்கள், நள்ளிரவு 1 மணி வரை விழித்து இருந்து உள்ளனர்.

 பின்னர் அவர்கள் தூங்கச்சென்று விட்டனர். இதனால் அதிகாலை 3 மணியளவில் தான் திருட்டு நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதுகிறார்கள். 

எனவே திருட்டு ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

Next Story