மாவட்ட கோர்ட்டில் 4,896 வழக்குகளுக்கு தீர்வு


மாவட்ட கோர்ட்டில் 4,896 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Sep 2021 8:28 PM GMT (Updated: 11 Sep 2021 8:28 PM GMT)

மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மூலம் பல்வேறு வழக்குகளில் சுமுக தீர்வு காணப்பட்டது.

மதுரை
மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மூலம் பல்வேறு வழக்குகளில் சுமுக தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ.26 கோடி வழங்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. மதுரை ஐகோர்ட்டில் மின்கட்டணம் செலுத்துவது தொடர்பான வழக்குகள், குடிநீர் கட்டணம் தொடர்பான வழக்குகள், திருமணம் விவகார வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல், அரசுப்பணியாற்றியவர்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களை கோருதல், வருவாய்த்துறை தொடர்பான வழக்குகள், சிவில் வழக்குகள் என மொத்தம் 325 வழக்குகள் சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரிக்க 2 அமர்வுகள் செயல்பட்டன. அதில் நீதிபதி ஆனந்தி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம், வக்கீல் கிருஷ்ணவேணி உள்ளிட்ட குழுவினர் ஒரு அமர்விலும், நீதிபதி முரளிசங்கர் தலைமையில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நம்பி, வக்கீல் ஆர்.வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் அடங்கிய மற்றொரு அமர்வும் இந்த வழக்குகளை விசாரித்தன.
முடிவில் 65 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.5 கோடியே 58 லட்சத்து 90 ஆயிரத்து 692-ஐ சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நீதிபதிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியின்போது மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் (நீதித்துறை) பூரண ஜெய ஆனந்த் மற்றும் பலர் இருந்தனர்.
மாவட்ட கோர்ட்டு
இதேபோல மதுரை மாவட்ட கோர்ட்டில் முதன்மை நீதிபதி வடமலை தலைமையில் நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வக்கீல்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அடங்கிய 22 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
இந்த அமர்வுகளில் காசோலை மோசடி வழக்குகள், விபத்து வழக்குகள், வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்பான வழக்குகள் என நீண்டநாளாக நிலுவையில் உள்ள வழக்குகள் மொத்தம் 6,286 வழக்குகள் சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் 4,896 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டு, ரூ.20 கோடியே 62 லட்சத்து 9 ஆயிரத்து 705 வழங்கப்பட்டது. குறிப்பாக மதுரையை சேர்ந்த மகேஸ்வரன், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் தங்களுக்கு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.95 லட்சம் இழப்பீட்டை நேற்று நீதிபதிகள் வழங்கினர்.
போலீஸ்காரர் குடும்பத்துக்கு இழப்பீடு
இதேபோல அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தியாயினி. இவர் பட்டாலியன் போலீஸ்காரராக பணியாற்றினார். கடந்த ஆண்டு இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் இறந்தார். இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.42 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலையை நீதிபதிகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தீபா, மாவட்ட நீதிபதிகள், சிவில் நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story