பொள்ளாச்சி அருகே தொழிலாளி அடித்துக்கொலை


பொள்ளாச்சி அருகே தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 12 Sept 2021 10:27 PM IST (Updated: 12 Sept 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50). இவருக்கு செந்தில் குமார் (20) மற்றும் 16 வயதில் ஒரு மகன் உள்ளார். செந்தில்குமார் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். மேலும் அவர் குடிபழக்கத்திற்கு அடிமை ஆகி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது தாய்க்கு புதிதாக மொபட் வாங்கினர். அந்த மொபட்டிற்கு பைனான்ஸ் கட்டுவதற்கு பணம் கொடுத்ததாக தெரிகிறது. அந்த பணத்தை கட்டுவது தொடர்பாக செந்தில்குமாருக்கும், அவரது 16 வயது தம்பிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

மேலும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது தடுக்க வந்த தந்தை கதிர்வேலையும் செந்தில்குமார் தாக்கியதாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி, செந்தில்குமாரை தாக்கிய போது, அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், செந்தில் குமார் குடிபோதையில் 10 அடி பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையில் செந்தில்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் கதிர்வேல் மற்றும் அவரது 16 வயது மகனை பிடித்து மீண்டும் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் செந்தில்குமாரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றினர். மேலும் கட்டிட தொழிலாளியை அடித்துக்கொலை செய்ததாக கதிர்வேல் மற்றும் அவருடைய மகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story