கோவையில் கார் மோதி இறந்த பெண் அடையாளம் தெரிந்தது
சாலையில் பிணம் வீசப்பட்டதாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக கார் மோதிய விபத்தில் அந்த பெண் இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விபத்து ஏற்படுத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கோவை
சாலையில் பிணம் வீசப்பட்டதாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக கார் மோதிய விபத்தில் அந்த பெண் இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விபத்து ஏற்படுத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சாலையில் பெண் பிணம்
கோவை சின்னியம்பாளையத்தில் கடந்த 6-ந் தேதி சாலையில் பெண் பிணம் கிடந்தது. அந்த பெண்ணின் உடல் மீது வாகனங்கள் ஏறி இறங்கியதால், உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
அதில் காலை நேரத்தில் ஒரு கார் வருவதும், அதில் வலது பக்கத்தில் இருந்து பெண் பிணம் வெளியே வீசப்படுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்படையினர் விசாரணை
இதனால் கொலையா?, விபத்தில் பெண் சிக்கினாரா? என்ற குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டது. அவர்கள் காணாமல் போன பெண்களின் புகைப்படங்களை ஒப்பிட்டும் விசாரணை நடத்தினர்.
மேலும் இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கொலை செய்யப்பட வில்லை என்பது தெரியவந்தது. எனவே அந்த பெண் விபத்தில் சிக்கி இறந்து இருக்கலாம் என்றும், விபத்தை ஏற்படுத்திய கார் எது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
விபத்தில் சிக்கி உயிரிழப்பு
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், தனது கார், பெண் மீது மோதவில்லை. தான் செல்லும்போதே பெண் பிணம் சாலையில் கிடந்ததாக கூறினார்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கோவை காளப்பட்டியை சேர்ந்த பைசல் (வயது 34) என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் அந்த பெண் உயிரிழந்தது தெரியவந்தது.
டிரைவர் கைது
இதையடுத்து போலீசார் பைசலை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. காலை நேரத்தில் அந்த பெண் சாலையை கடக்க முயன்றபோது பைசல் ஓட்டி வந்த கார் மோதியுள்ளது. காரில் இருந்து சத்தம் வந்த தால், அவர் சிறிது தூரம் சென்று காரை நிறுத்தி பார்த்து உள்ளார்.
காரில் சேதம் எதுவும் இல்லாததால் அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் காரை ஒர்க் ஷாப்பில் விட்டபோதுதான், காரின் கீழ்ப் பகுதியில் ரத்தக்கறை மற்றும் சேலை சிக்கி இருப்பது தெரியவந்தது. ஆனால் அதை தெரிவிக்காமல் அவர் மறைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கேன்டீனில் வேலை
இதையடுத்து உயிரிழந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், அன்னூர் தாலுகா கரியாம்பாளையத்தை சேர்ந்த லட்சுமி (வயது 74) என்பதும், அவர் கோவை-அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி கேன்டீனில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அந்த பெண்ணின் உடலை பார்த்து, இறந்தது லட்சுமி தான் என்பதை அவருடைய மகன் உறுதி செய்தார். விபத்தில் அந்த பெண் இறந்தது உறுதியானதால், இந்த வழக்கு கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிாிவுக்கு மாற்றப்பட்டது.
Related Tags :
Next Story