நரேகா திட்டத்தின் கீழ் கர்நாடகத்திற்கு ரூ.959 கோடி பாக்கி விடுவிப்பு; மந்திரி ஈசுவரப்பா பேட்டி
நரேகா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.959 கோடி பாக்கியை கர்நாடகத்திற்கு விடுவித்துள்ளதாக மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
பெங்களூரு:
கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ரூ.959 கோடி விடுப்பு
மத்திய அரசின் கிராமப்புற வேலை உறுதி (நரேகா) திட்டத்தின் கீழ் கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய பாக்கியை மத்திய அரசு முழுமையாக அதாவது ரூ.959 கோடியை விடுவித்துள்ளது. சமீபத்தில் நான் டெல்லிக்கு சென்று கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரியை நேரில் சந்தித்து, நரேகா திட்ட பாக்கி தொகையை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்று பாக்கியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதற்காக பிரதமர் மோடி மற்றும் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்துராஜ் மந்திரிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாக்கித்தொகை மட்டுமின்றி கூடுதலாக ரூ.117 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 13 கோடி மனித வேலை நாட்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதே ஆண்டின் நவம்பர் மாதத்திற்குள் இந்த இலக்கை நாங்கள் அடைந்தோம். கடந்த மார்ச் மாதத்திற்குள் மனித வேலை நாட்களை 15 கோடியாக அதிகரித்தோம்.
இலக்கு நிர்ணயம்
நடப்பு ஆண்டில் 13 கோடி மனித வேலை நாட்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதுவரை 11.90 கோடி நாட்கள் வேலை வழங்கியுள்ளோம். அதிக மனித வேலை நாட்களை உருவாக்குவதில் நாங்கள் சாதனை படைத்துள்ளோம்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
Related Tags :
Next Story