மதுரை,
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் சூரி. மதுரையை சேர்ந்த இவரது சகோதரர் மகள் திருமணம் ரிங்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் பிரபல நடிகர்கள் ஆர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவிற்கு வந்தவர்களை நடிகர் சூரி குடும்பத்தினர் வரவேற்றனர். இந்த நிலையில் திருமண மண்டபத்தில் உள்ள மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த தங்க கவர்னர் மாலை, நெக்லஸ், கை சங்கிலி என 10 பவுன் நகைகள் திடீரென்று காணவில்லை. அதனை மண்டபம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து திருமண மண்டப மேலாளர் சூரியபிரகாஷ் என்பவர் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.