ஒரே நாளில் அதிக தடுப்பூசி, தமிழகத்திற்கு 4-வது இடம்


ஒரே நாளில் அதிக தடுப்பூசி, தமிழகத்திற்கு 4-வது இடம்
x
தினத்தந்தி 13 Sep 2021 8:37 PM GMT (Updated: 13 Sep 2021 8:37 PM GMT)

ஒரே நாளில் அதிக தடுப்பூசி என்ற கணக்கில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இணையத்தில் சரியாக பதிவு செய்யாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மதுரை,

ஒரே நாளில் அதிக தடுப்பூசி என்ற கணக்கில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இணையத்தில் சரியாக பதிவு செய்யாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கோவின் இணையதளம்

கொரோனா நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பு கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவுக்கு பின்பே தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பொதுமக்கள் கோவின் இணையதளத்தில் இருந்து எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
மத்திய அரசின் கணக்கீட்டின்படி நாடு முழுவதும் நேற்று வரை 75 கோடியே 2 லட்சத்து 84 ஆயிரத்து 569 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 8 கோடியே 83 லட்சத்து 61 ஆயிரத்து 305 பேர் போட்டு உள்ளனர். மராட்டியத்தில் 6 கோடியே 83 லட்சத்து 43 ஆயிரத்து 623 பேரும், குஜராத்தில் 5 கோடியே 25 லட்சத்து 77 ஆயிரத்து 634 பேரும், மத்திய பிரதேசத்தில் 5 கோடியே 19 லட்சத்து 49 ஆயிரத்து 214 பேரும் தடுப்பூசி போட்டு உள்ளனர். இவர்களை தொடர்ந்து ராஜஸ்தான், கர்நாடகா, மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த பட்டியலில் தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3 கோடியே 95 லட்சத்து 83 ஆயிரத்து 602 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

அதிக தடுப்பூசி

ஒரே நாளில் அதிக தடுப்பூசி என்ற கணக்கீட்டின்படி கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி நாடு முழுவதும் ஒரே நாளில் 1 கோடியே 41 லட்சத்து 20 ஆயிரத்து 467 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். மாநிலங்கள் வாரியாக ஒரே நாளில் அதிக தடுப்பூசி என்ற மத்திய அரசின் பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த 6-ந் தேதி 34 லட்சத்து 90 ஆயிரத்து 56 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். 2-வது இடத்தில் பீகாரில் ஆகஸ்டு 31-ந் தேதி 27 லட்சத்து 57 ஆயிரத்து 931 பேரும், 3-ம் இடத்தில் மத்திய பிரதேசத்தில் ஆகஸ்டு 25-ந் தேதி 25 லட்சத்து 4 ஆயிரத்து 896 பேரும், 4-ம் இடத்தில் தமிழகத்தில் 12-ந் தேதி(நேற்று முன்தினம்) 20 லட்சத்து 13 ஆயிரத்து 298 பேரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
ஆனால் 12-ந் தேதி தமிழகத்தில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த கணக்கீட்டின்படி ஒரே நாளில் அதிக தடுப்பூசி என்ற பட்டியலில் உத்தரபிரதேசத்திற்கு அடுத்தப்படியாக தமிழகம் 2-வது இடத்தில் இருக்க வேண்டும். ஆனால் இணையத்தில் பதிவு குளறுபடி காரணமாக தமிழகம் 4-வது இடத்தில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிறப்பு முகாம்

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் நடந்த சிறப்பு முகாமின் போது கூட்டம் அதிகம் இருந்ததால் அவர்களின் ஆதார் உள்பட ஆவணங்கள் மட்டும் பெறப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரவு 9 மணி வரை சிறப்பு முகாம் நடந்ததால் அன்றைய தினம் கோவின் இணையதளத்தில் ஏராளமானோருக்கு பதிவு செய்யவில்லை. இவை அனைத்தும் தொடர்ச்சியாக பதிவு செய்யப்படும். என்றைய தினம் பதிவு செய்கிறோமோ அன்றைய தினம் தான் தடுப்பூசி செலுத்தியதாக மத்திய அரசு கணக்கு வைத்து கொள்ளும். எனவே தான் மாநில அரசு, மத்திய அரசு இடையே கணக்கீட்டில் வித்தியாசம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தடுப்பூசி சான்றிதழ்
மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
12-ந் தேதி நடந்த சிறப்பு முகாமில் தமிழகத்தில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேர் தடுப்பூசி செலுத்தியதாக மாநில அரசு கூறுகிறது. ஆனால் மத்திய அரசின் கணக்குப்படி அன்றைய தினம் 20 லட்சத்து 13 ஆயிரத்து 298 பேர் மட்டுமே செலுத்தியதாக உள்ளது. வித்தியாசம் 8 லட்சத்து 77 ஆயிரத்து 723 ஆக உள்ளது. இவர்களுக்கு அன்றைய தினம் கோவின் இணையதளத்தில் பதிவு செய்யாமல் விட்டு இருந்தால், இன்று (நேற்று) பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் நேற்று வெறும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 753 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வளவு பெரிய வித்தியாசத்திற்கு என்ன காரணம் என்பதனை ஆராய வேண்டும். கோவின் இணையதளத்தில் பதிவு செய்யாமல் தடுப்பூசி போட்டு கொண்டால், அவர் தடுப்பூசி போடாதவர் என்ற கணக்கில் தான் இருக்கும். எனவே தடுப்பூசி செலுத்தியவர்களின் பெயர்களை உடனடியாக கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story