சாலையை மறித்து காரை நிறுத்தியதை கண்டித்ததால் ஆத்திரம் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல்


சாலையை மறித்து காரை நிறுத்தியதை கண்டித்ததால் ஆத்திரம் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல்
x
தினத்தந்தி 14 Sep 2021 3:22 PM GMT (Updated: 14 Sep 2021 3:22 PM GMT)

சென்னையை அடுத்த பனையூரில் சாலையை மறித்து காரை நிறுத்தியதை கண்டித்ததால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது. 2 கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.அவென்யூவில் முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்த சிலர், சாலையை மறித்தபடி காரை நிறுத்திவிட்டு மது அருந்தி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பனையூரைச் சேர்ந்த கவின் (வயது 21) என்பவர் பணி முடிந்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்தார். அவர், வழியை மறித்து சாலையின் குறுக்கே காரை நிறுத்தியதை கண்டித்து, இருசக்கர வாகனத்தில் இருந்தபடியே தொடர்ந்து ஹாரன் அடித்தார்.

கோஷ்டி மோதல்

இதனால் ஆத்திரம் அடைந்த அங்கு மது அருந்தி கொண்டு இருந்தவர்கள், கவினை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதையறிந்த பனையூர் குப்பத்து பகுதி மக்கள், இதற்கு நியாயம் கேட்டு அங்கு திரண்டு வந்தனர்.

அப்போது பொதுமக்களுக்கும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நாற்காலி, பீர் பாட்டில், வாளி, உருட்டுக்கட்டை மற்றும் கற்களை கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இந்த கோஷ்டி மோதலில் பனையூர் குப்பத்தைச் சேர்ந்த சுரேந்தர் (28) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர், அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மோட்டார்சைக்கிளுக்கு தீ

இந்த மோதலில் ஒரு மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. 2 கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த கானத்தூர் போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியதால், மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story