சேடல்டேம் ஆற்றில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்


சேடல்டேம் ஆற்றில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 14 Sept 2021 10:57 PM IST (Updated: 14 Sept 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

ஆபத்துகள் நிறைந்த சேடல் டேம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.

வால்பாறை, 
ஆபத்துகள் நிறைந்த சேடல் டேம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

சோலையாறு அணை 

பி.ஏ.பி. திட்டத்தின் அடிப்படை அணியாக இருப்பது சோலையாறு. வால்பாறை அருகே உள்ள இந்த அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி ஆகும். ஆனால் இங்கு 165 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம். 

அணையின் நீர்மட்டம் 160 அடியை தாண்டும்போது, நீர்தேக்க பகுதியில் உள்ள சேடல்டேம் என்ற பகுதி வழியாக பரம்பிக் குளம் அணைக்கு தண்ணீர் தானாகவே வெளியேறும் வசதி உள்ளது. 

சேடல்டேம் ஆறு

தற்போது சோலையாறு அணை நிரம்பி வழிவதால், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் சென்று வருகிறது. இதன் காரணமாக சேடல்டேம் ஆற்றில் இருகரைகளை தொட்ட படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. 

இந்த ஆற்றில் தண்ணீர் அருவிகளாக கொட்டி ஆர்ப்பரித்து தண்ணீர் செல்லும். அந்த அருவி பகுதிகளை பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால் அங்கு ஆபத்துகள் அதிகம் என்பதால் அங்கு செல்ல அனுமதிப்பது இல்லை. 

அத்துமீறும் சுற்றுலா பயணிகள்

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி ஆற்றில் உள்ள அருவியில் குளித்த கோவையை சேர்ந்த பயிற்சி டாக்டர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவருடைய கதி என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. எனவே இந்த ஆற்றுக்கு செல்ல போலீசார் தடை விதித்து அதற்கான அறிவிப்பு பலகையையும் வைத்தனர். 

ஆனால் தற்போது  அந்த அறிவிப்பு பலகையை காணவில்லை. இதன் காரணமாக அத்துமீறி ஆற்றுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளித்து மகிழ்கிறார்கள். சில நேரத்தில் அருவிக்கு சென்றும் குளிக்கிறார்கள். இதனால் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தீவிர கண்காணிப்பு 

சேடல்டேம் ஆற்றுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வைக்கப் பட்டு இருந்த அறிவிப்பு பலகை எங்கே சென்றது என்பது தெரிய வில்லை. அங்கு அத்துமீறும் சுற்றுலா பயணிகள் குறித்து தகவல் அறிந்த சேக்கல்முடி போலீசார் அங்கு சென்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

எனவே ஆபத்துகள் நிறைந்த சேடல்டேம் ஆறு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அத்துடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அப்போதுதான் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story