11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்
ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7 ¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. இதை தவிர குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டியது. அதன்பிறகு போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கடந்த 22-ந்தேதி அணை முழுகொள்ளளவை எட்டியது. இதையடுத்து பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர் கால்வாய்கள் வழியாக குளங்கள், தடுப்பணைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 31-ந்தேதி அணை மீண்டும் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி 6 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு நீர்வரத்து குறைந்ததால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மின் உற்பத்தி செய்யப்பட்டு காடம்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அப்பர் ஆழியாறு வழியாக ஆழியாறு அணைக்கு வந்தது.
நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 580 கன அடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இதற்கிடையில் அப்பர் ஆழியாறு அணையில் இருந்தும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வினாடிக்கு 2580 கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1815 கன அடியும், பொள்ளாச்சி கால்வாய் வழியாக வினாடிக்கு 200 கன அடியும், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 80 கன அடியும், மின் உற்பத்தி நிலையம் வழியாக வினாடிக்கு 485 கன அடியும் திறந்து விடப்பட்டது.
இதற்கிடையில் நீர்வரத்து குறைந்ததால் காலை 11 மணிக்கு பிறகு மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 119.70 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story