தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த காட்டுயானைகள்


தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த காட்டுயானைகள்
x
தினத்தந்தி 15 Sept 2021 10:54 PM IST (Updated: 15 Sept 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்துவிட்டு தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் ஓய்வெடுத்தன. அவைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வால்பாறை,

குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்துவிட்டு தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் ஓய்வெடுத்தன. அவைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

குடியிருப்பு பகுதியில் அட்டகாசம்

கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் இருந்து கேரள வனப்பகுதிக்கு சென்ற காட்டுயானைகள், மீண்டும் வால்பாறை வனப்பகுதிக்கு வர தொடங்கி உள்ளது. இதனால் வால்பாறை-கேரள எல்லையில் அமைந்துள்ள எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

வால்பாறை-கேரள எல்லையில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் சங்கிலி ரோடு பகுதிக்கு 2 குட்டிகளுடன் காட்டுயானை வந்தது. தொடர்ந்து முத்துமுடி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து நேற்று முன்தினம் அட்டகாசம் செய்தது. இந்த யானைகள் அங்குள்ள தேயிலை தோட்டத்தை ஒட்டிய சிறு வனச்சோலை பகுதியில் 2-வது நாளாக முகாமிட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஓய்வெடுத்த யானைகள்

இந்த நிலையில் அந்த யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் தேயிலை தோட்டங்களை ஒட்டிய சிறு வனச்சோலை பகுதியிலேயே தொடர்ந்து நடமாடி வருகிறது. அதில் 2 குட்டியானைகள் ஆங்காங்கே அவ்வப்போது படுத்து தூங்க தொடங்கி விடுகிறது. அப்போது அவைகளை தாய் யானை பாதுகாத்து வருகிறது. குட்டிகள் மீது துதிக்கையை வைத்து அச்சுறுத்தல் ஏதேனும் வருகிறதா? என்று விழிப்புடன் கண்காணித்து வருகிறது. மேலும் பசுந்தீவனங்களை தின்றுவிட்டு அங்கேயே ஓய்வெடுத்து வருகின்றன. 

எச்சரிக்கை

வால்பாறை பகுதியில் தாய்முடி, பன்னிமேடு சங்கிலி ரோடு, தோணிமுடி, உருளிக்கல், வில்லோணி, லோயர்பாரளை ஆகிய எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளது. எனவே எஸ்டேட் நிர்வாகத்தினர் தங்களது எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதை கண்காணித்து

வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பதோடு, எஸ்டேட் தொழிலாளர்களை பணிக்கு அனுப்பும்போதும், அவர்கள் பணிமுடிந்து திரும்பும்போதும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். மேலும் எஸ்டேட் பகுதி மக்கள் இரவிலும், அதிகாலை நேரத்திலும் வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.


Next Story