வீட்டுமுன் தொழில் அதிபர் படுகொலை


வீட்டுமுன் தொழில் அதிபர் படுகொலை
x
தினத்தந்தி 15 Sept 2021 11:50 PM IST (Updated: 15 Sept 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

திருப்பாச்சேத்தி அருகே வீட்டு முன் தொழில் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதற்கு உள்ளாட்சி தேர்தல் விரோதம் காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

திருப்புவனம்,

திருப்பாச்சேத்தி அருகே வீட்டு முன் தொழில் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதற்கு உள்ளாட்சி தேர்தல் விரோதம் காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

தொழில் அதிபர்

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள வேம்பத்தூர் லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுமலை (வயது 50). இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி தொழில் செய்து வந்தார். இவருக்கு லெட்சுமிபுரத்தில் வயல் உள்ளது. இங்கு நடைபெறும் விவசாய பணிகளை அடிக்கடி வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் விவசாய பணிகளை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று வழக்கம் போல வயலுக்கு புறப்பட தயார் ஆனார். அப்போது வீட்டு முன் நின்றிருந்த அவரை அங்கு வந்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் சம்பவ இடத்திலேயே அழகுமலை பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

இது பற்றி அறிந்ததும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர். அழகுமலை உடலை பார்த்து கதறி அழுதார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஏழுமலை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட அழகுமலை உடலை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில். அழகுமலையின் தம்பி சங்கர் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார். அழகுமலை தனது தம்பிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தலில் எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்ட அதே ஊரை சேர்ந்த சுந்தர், ராஜா ஆகியோருக்கும், அழகுமலைக்கும் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் அழகுமலையின் தங்கை மாலாதேவி (மாற்றுத்திறனாளி), இவரது தாயார் ராக்கு ஆகியோருடன் சுந்தர், ராஜா, ராஜாவின் மனைவி ராஜலட்சுமி ஆகிய 3 பேரும் தகராறு செய்ததாக ராக்கு திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில்தான், வீட்டுமுன் அழகுமலையை ஒரு கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story