பன்னிமேடு எஸ்டேட் சாலையோரத்தில் மண்சரிவு


பன்னிமேடு எஸ்டேட் சாலையோரத்தில் மண்சரிவு
x
தினத்தந்தி 16 Sept 2021 10:40 PM IST (Updated: 16 Sept 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் பன்னிமேடு எஸ்டேட் சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. அங்கு தடுப்புச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழை, மற்ற நேரங்களில் சாரல் மழை என தொடர்ந்து மழை பெய்கிறது. 

இந்த மழை காரணமாக பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் முக்கியமானதாக கருதப்படும் சோலையாறு அணை நீர்மட்டம் கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதியில் இருந்து தனது முழு கொள்ளளவான 160 அடியில் இருந்து வருகிறது. இதனால் ஒப்பந்தப்படி சோலையார் மின் நிலையம்-2 அவ்வப்போது இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்த பிறகு கேரளாவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் சோலையார் மின் நிலையம்-1 இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்த பின் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது தவிர சேடல்டேம் வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் மின் உற்பத்தி தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வால்பாறை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை இரவு, பகலாக கனமழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் முதல் சற்று மழை குறைந்து வருகிறது. ஆனாலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்த மழை காரணமாக வால்பாறையில் இருந்து முடீஸ் வழியாக சோலையாறு அணைக்கு செல்லும் வழியில் பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிசன் பகுதியில் உள்ள சாலையோரத்தில் உயர் மின்னழுத்த கம்பி செல்லும் மின் கம்பத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால், மேலும் மண்சரிவு ஏற்பட்டால் மின் கம்பம் சாய்ந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்போது பெரிய அளவிலான ஆபத்துகளும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுவதற்கான சூழல் நிலவுகிறது. 

னவே மின்சார வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பம் சாய்ந்து விழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும், அங்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story