புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Sept 2021 12:59 AM IST (Updated: 17 Sept 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

வேகத்தடை தேவை 
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடைவீதி  மற்றும் பஸ்நிலையம் அருகில் உள்ள சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் உள்ள வளைவில் வேகத்தடை இல்லை. இதன் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பொதுமக்களும் சாலையை கடக்க அச்சம் அடைகின்றனர். எனவே, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். 
பிரான்சிஸ் சேவியர், தேவிபட்டினம். 
ஆபத்தான மின்கம்பம் 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி பஞ்சாயத்து வள்ளல் அழகப்பா பொன்நகர், முருகப்பா நகர், பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் சில சேதமடைந்து காணப்படுகிறது. சில மின்கம்பங்களில் முட்டுக்கொடுத்து வைத்துள்ளனர். அது எப்போது சாய்ந்து விழும் என்ற அச்சத்தில் உள்ளோம். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு ஆபத்தான மின்கம்பங்களை அகற்றுவார்களா?
அருணாச்சலம், இலுப்பக்குடி. 

தொல்லை தரும் தெருநாய்கள்
மதுரை மாவட்டம் பரவை கிராமத்தில் சரவண நகர், வளவன்நகர், அதலை மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், சிறுவர், சிறுமிகள் வெளியில் செல்லவே அச்சம் அடைகின்றனர். எனவே, தொல்லை தரும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
 கிராம மக்கள், பரவை. 

விடுதி திறக்கப்படுமா?
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பலரும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களை உடன் இருந்து கவனிக்கும் அவர்களது உறவினர்கள் தங்குவதற்கு வசதியாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கும் விடுதி கட்டப்பட்டது. ஆனால் இதுநாள்வரை இந்த விடுதி கட்டிடம் திறக்கப்படவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பரத்ராஜா, விருதுநகர். 
கண்காணிப்பு கேமரா பொருத்துவார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி, கூட்டுறவு வங்கி, கிராம நிர்வாக அலுவலகம், வர்த்தக கடைகள், ரேஷன் கடைகள், நூலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதனால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். எனவே, இங்கு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். 
அசோக்குமார், வண்ணாங்குண்டு. 

சுகாதார வளாகம் தேவை 
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் வெற்றியூர் ஊராட்சியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுகாதார வளாகம் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திறந்த வெளிகளில் இயற்கை உபாதை கழிக்க வேண்டிய நிலை உள்ளது. பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி இங்கு சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும். 
படியான், வெற்றியூர். 
வீணாகும் குடிநீர் 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாரதிநகரில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், சாத்தூர். 

சாலை வசதி வேண்டும்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி அச்சம்பட்டி கிராமத்தில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி உள்ளது. அதில் சுமார் 1000 மாணவர்கள் படிக்கின்றனர். 500 மாணவர்கள் வலசை கிராமத்தில் இருந்து செல்கின்றனர். அந்த பள்ளிக்கு செல்லும் பாதை அச்சம்பட்டி கண்மாய்கரை பகுதி என்பதால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் இங்கு தார்சாலை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாரதி, வலசை கிராமம்.

சுகாதார கேடு 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் 3-வது வார்டு புது கிழக்கு தெரு-பட்டாணியப்பா தர்கா செல்லும் சாலையில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு வசதியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த குப்பை தொட்டியை நகராட்சியே அப்புறப்படுத்தி விட்டது. இதனால் பொதுமக்கள் குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இங்கு குப்பை தொட்டி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நாகூர், கீழக்கரை.

Next Story