முதலீட்டாளர்களின் தொகையை ஒப்படைக்க நீதிபதி கிருபாகரன் தலைமையில் குழு
நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முதலீட்டாளர்களுக்கு உரிய தொகையை வழங்க நீதிபதி கிருபாகரன் தலைமையில் குழு அமைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முதலீட்டாளர்களுக்கு உரிய தொகையை வழங்க நீதிபதி கிருபாகரன் தலைமையில் குழு அமைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மோசடி
மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 17,379 பேரிடம் நிதி நிறுவனம் நடத்தி ரூ.49.76 கோடி வசூலித்து ஏமாற்றியது குறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த பரிவார் நிதி நிறுவன இயக்குனர்கள் ராகேஷ் சிங் நரவாரியா, அகிபரன் சிங் ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்கள் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.ஐ. சார்பில், மனுதாரர்கள் அனுமதியின்றி நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர். பரிவார் நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னை, நிலக்கோட்டை, பெங்களூருவில் உள்ள பல கோடி ரூபாய் சொத்து மற்றும் வங்கி முதலீடு ரூ.4.65 கோடி ஆகியவை முடக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
பரிவார் நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட சிலர் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து மனுத்தாக்கல் செய்தனர். 30 ஆயிரம் முதலீட்டாளர் பட்டியலையும் தாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், பரிவார் நிறுவனத்தில் மொத்தம் 45,167 பேர், இந்த நிறுவனத்தில் ரூ.77.91 கோடி அளவுக்கு பணம் முதலீடு செய்துள்ளனர் என்றார்.
நீதிபதி கிருபாகரன் குழு
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
பரிவார் நிதி நிறுவன வழக்கில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை ஒப்படைக்க நீதிபதி கிருபாகரன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு, மதுரையில் அலுவலகம் தொடங்கி செயல்பட வேண்டும். குழுவின் தலைவர் தனக்கு உதவியாக வக்கீல் மற்றும் உதவியாளரை நியமித்து கொள்ளலாம்.
குழுவின் செலவுக்காக மனுதாரர்கள் வருகிற அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். நிதி நிறுவனத்தின் சொத்து உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மனுதாரர்கள், சி.பி.ஐ. மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் ஆகியோர் குழுவிடம் வழங்க வேண்டும். குழுவின் வருகை, விசாரணை விவரங்களை ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை குழு விற்பனை செய்து நிதி திரட்டலாம். இந்த பணிகளை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்.
ஜாமீன்
மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர்கள் குவாலியர் சி.பி.ஐ.யிடம் 2 நாட்களுக்கு ஒரு முறையும், சென்னை சி.பி.ஐ.யிடம் 15 நாட்களுக்கு ஒரு முறையும் ஆஜராக வேண்டும். தலைமறைவாகக்கூடாது. நிபந்தனைகளை மீறினால் ஜாமீன் தானாக ரத்தாகிவிடும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story