மாணவ, மாணவிகள் 6 பேருக்கு கொரோனா


மாணவ, மாணவிகள் 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Sep 2021 8:33 PM GMT (Updated: 16 Sep 2021 8:33 PM GMT)

மதுரையில் மாணவ, மாணவிகள் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மதுரை, செப்.17-
மதுரையில் மாணவ, மாணவிகள் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி, 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகின்றனர். இருந்தபோதிலும் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மதுரையில் பள்ளி மாணவ, மாணவிகள் 6 பேருக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்கள் 6 பேருக்கும் லேசான பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 பேர் சிகிச்சை
இதுகுறித்து மருத்துவத் துறையினர் கூறுகையில், “மதுரை நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த 17 வயது மாணவி, பாஸ்டின் நகரைச்சேர்ந்த 13 வயது மாணவர், மோதிலால் சாலையைச் சேர்ந்த 16 வயது மாணவி, கோச்சடையைச்சேர்ந்த 17 வயது மாணவர், டி.ஆர்.ஓ. காலனியைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஆகியோர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை” என்றனர்.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, "மதுரை நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில மாணவர்களுக்கு அறிகுறிகள் உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. அந்த மாணவன் படித்த பள்ளியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Next Story