பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம்; பெங்களூரு, மைசூருவில் பலத்த பாதுகாப்பு
பெங்களூரு, மைசூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக, டெல்லியில் கைதான 6 பயங்கரவாதிகள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
பயங்கரவாதிகள் கைது
வடமாநிலங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) நடக்க உள்ள தசரா விழாக்கள் போது குண்டுவெடிப்பை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டி இருந்த 6 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்து இருந்தனர். அவர்களில் 2 பேர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டி இருந்த தகவலும் வெளியானது. அதில் கர்நாடகத்தில் உள்ள பெங்களூரு, மைசூருவிலும் இவர்கள் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்து உள்ளது.
தசரா விழாவை சீர்குலைக்க....
இதுகுறித்து மத்திய உள்துறை, கர்நாடக அரசுக்கு தகவல் கொடுத்து உள்ளது. மேலும் பெங்களூரு, மைசூரு நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் கர்நாடக அரசுக்கு, மத்திய உள்துறை உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து பெங்களூரு, மைசூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மைசூருவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தசரா பண்டிகை தொடங்கி 9 நாட்கள் வரை நடைபெற உள்ளது.
இந்த தசரா ஊர்வலத்தின் சிகர நிகழ்ச்சியாக யானைகள் அணிவகுத்து செல்லும் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். அந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற இவர்கள் சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்றும், மைசூரு தசரா விழாவை சீர்குலைக்க அவர்கள் நினைத்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
உச்சகட்ட பாதுகாப்பு
இதையடுத்து மைசூருவில் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மைசூருவில் சந்தேகம்படும்படியாக யாராவது சுற்றித்திரிந்தால் அவர்களை கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுபோல பெங்களூருவில் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பயங்கரவாதிகள் அச்சுறுத்தலால் மைசூரு, பெங்களூருவில் போலீசார் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சவாலை எதிர்கொள்ள தயார்
இதுகுறித்து பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
டெல்லியில் கைதான 6 பயங்கரவாதிகள் பெங்களூருவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. மத்திய உள்துறை உத்தரவுப்படி பெங்களூருவில் பாதுகாப்பை அதிகரித்து உள்ளோம். பொதுவாக பெங்களூரு போலீசார் எந்த நேரத்திலும் எச்சரிக்கையாக இருப்பார்கள். பெங்களூருவுக்கு எந்தவித அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்க்கொள்ள போலீஸ் படை தயாராக உள்ளது. எங்களிடம் கருடா, ஒய்சாலா உள்ளிட்ட படைகள் உள்ளன. எந்த சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story