காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாப சாவு
காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாப சாவு
பேரூர்
பேரூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
விவசாயி
கோவை மாவட்டம் பேரூர் தாலுகா வெள்ளிமலைப்பட்டினம் ஊராட்சி விராலியூரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60). விவசாயி. இவர், விராலியூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வந்தார்.
ஆட்டுக்காரன் கோவில் பள்ளம் அருகே சின்னசாமிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில், வெங்காயம், வெள்ளரிக்காய் பயிரிடப் பட்டு உள்ளது. இதனால் அவர், நேற்று முன்தினம் இரவு தோட்ட காவலுக்கு சென்றார்.
காட்டு யானை
இந்த நிலையில் போளுவாம்பட்டி வனச்சரகம், நரசீபுரம் வனக்காப்பு பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று ஆட்டுக்காரன் கோவில் பள்ளம் பகுதிக்கு வந்தது.
அது, தோட்டத்துக்குள் புகுந்து நள்ளிரவு 12 மணி அளவில் வெங்காய பட்டறை அருகே ஆட்கள் நடமாடுவது போல் சரசரவென்று சத்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னசாமி திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அவர் தோட்டத்து சாலையின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார்.
அவர் எதிர்பாராத நிலையில் அங்கு நின்று கொண்டு இருந்த காட்டு யானை திடீரென்று சின்னசாமியை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது.
விவசாயி சாவு
இதில் கீழே விழுந்த சின்னசாமியை அந்த யானை ஆவேசமாக மிதித்து தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்த சின்னசாமி கூச்சலிட்ட படி மயங்கினர். இதற்கிடையே தோட்டத்துக்குள் யானை புகுந்ததை அறிந்த அங்குள்ள தோட்டக்காரர்கள் டார்ச்லைட்டுடன் அங்கு வந்தனர்.
அவர்கள் ஒன்று சேர்ந்து காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர். இதையடுத்து மயங்கி கிடந்த சின்னசாமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சின்னசாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், விவசாயிகளுடன் சேர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
காட்டு யானை தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story