ஆனைமலை அருகே மூதாட்டி கற்பழித்து கொலை


ஆனைமலை அருகே மூதாட்டி கற்பழித்து கொலை
x
தினத்தந்தி 17 Sept 2021 10:38 PM IST (Updated: 17 Sept 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி, தனது மகன் மற்றும் மருமகளுடன், அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் தங்கியிருந்து கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன், ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில், மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கணபதிபாளையத்தை சேர்ந்த தொழிலாளியான பொன்னுச்சாமி(46) என்பவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். தொடர்ந்து அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றி பொன்னுச்சாமியை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட மூதாட்டி தங்கியிருந்த தோட்டத்துக்கு பக்கத்து தோட்டத்துக்கு பொன்னுச்சாமி வேலைக்கு வந்தார். இதனால் அடிக்கடி மூதாட்டியின் வீட்டுக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து மது குடித்த பொன்னுச்சாமி, குடிபோதையில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது மூச்சுத்திணறி மூதாட்டி உயிரிழந்தார். உடனே அங்கிருந்து பொன்னுச்சாமி தப்பி சென்றுவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story