குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களை பாடப்புத்தகங்களில் அச்சிட முடியுமா?
பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களை பாடப்புத்தகங்களில் அச்சிட முடியுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களை பாடப்புத்தகங்களில் அச்சிட முடியுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
குழந்தைகள் விழிப்புணர்வு
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த திலீபன் செந்தில், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சமீபகாலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. டெல்லி நிர்பயா சம்பவத்திற்கு பிறகு போதிய சட்டத் திருத்தங்கள் செய்த பின்பும் பாலியல் தொந்தரவு குறித்து பெண் குழந்தைகள், பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.
பெரும்பாலான வளர் இளம் பெண்களுக்கு தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறோம் என்பதே தெரியவில்லை. தெரிந்தாலும் வெளியில் சொல்வதற்கு அஞ்சுகின்றனர். போதுமான சட்ட விழிப்புணர்வு இல்லாதது தான் இதற்கு காரணம். அதனால் குழந்தைகளின் சட்ட உரிமை பற்றி பள்ளிப்பருவத்தில் இருந்தே கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பாடப்புத்தகங்களில் அச்சிடுங்கள்
கேரள அரசின் பள்ளிப்பாடத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் புத்தகங்களின் முதல் பக்கத்தில் குழந்தைகள் உரிமை என்ற தலைப்பில் பேச்சுரிமை, வாழ்வுரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாலியல் மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை, சாதி மற்றும் நிறத்திற்கு எதிரான உரிமை, குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அபாயகரமான வேலை செய்வதற்கு எதிரான உரிமை, குழந்தை திருமணத்திற்கு எதிரான உரிமை, கலாசாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான உரிமை, இலவச கட்டாயக்கல்வி உரிமை, கற்கவும், ஓய்வு எடுப்பதற்குமான உரிமைகள் அச்சிடப்பட்டு உள்ளன.
இதைப்போல நமது மாநில பாடப்புத்தகங்களிலும் மேற்கண்ட அடிப்படை உரிமைகள், கடமைகள் மற்றும் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் சட்டங்கள் குறித்தும் அச்சிட வேண்டும்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமைகள், கடமைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு, குழந்தைகள் உதவி எண், காவல்துறையின் உதவி எண் பற்றிய விவரங்களை, நடப்பு ஆண்டு அல்லது அடுத்த கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பாடப்புத்தகங்களில் அச்சிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நோட்டீஸ்
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story