பொள்ளாச்சி வழியாக ரெயில் அதிவேக சோதனை ஓட்டம்
திண்டுக்கல்-பாலக்காடு இடையே பொள்ளாச்சி வழியாக ரெயில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி தண்டவாளங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி,
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு மற்றும் போத்தனூர் இடையேயான மீட்டர் கேஜ் ரெயில்பாதை, அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து பொள்ளாச்சி வழியாக கோவை, சென்னை, திருச்செந்தூர், திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்பட்டது. தற்போது கொரோனாவை காரணமாக காட்டி பெரும்பா£லான ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் காரணமாக தற்போது சென்னை, திருவனந்தபுரம், மதுரைக்கு மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை ரெயில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து ஒரு என்ஜின் உள்பட 3 பெட்டிகளுடன் காலை 9 மணிக்கு புறப்பட்ட ரெயில் பாலக்காட்டிற்கு பகல் 12.30 மணிக்கு சென்று அடைந்தது.
பின்னர் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு வந்த ரெயில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இன்று (சனிக்கிழமை) பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர், மேட்டுப்பாளையம் வரை ரெயில் அதிவேக சோதனை நடைபெறுகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
தற்போது திண்டுக்கல்லில் இருந்து பழனி வரைக்கும் 75 கிலோ மீட்டர் வேகத்திலும், பொள்ளாச்சி&பழனி இடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், பொள்ளாச்சி-பாலக்காடு இடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வழித்தடங்களில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி தண்டவாளத்தின் உறுதி தன்மையை துல்லியமாக கண்டறிய ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன் மூலம் தண்டவாளத்தில் எந்த இடத்தில் அதிர்வு உள்ளது என்பதை கண்டறிந்து சரிசெய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story