மதுரையில் 2 மணி நேரம் பலத்த மழை


மதுரையில் 2 மணி நேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 18 Sept 2021 3:29 AM IST (Updated: 18 Sept 2021 3:29 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது.

மதுரை, 
மதுரையில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
மழை
மதுரையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் மதுரை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் மதுரையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இந்தநிலையில் நேற்று மாலையில் திடீரென கருமேகங்கள் ஒன்று திரண்டு மழைக்கான அறிகுறி உருவானது. இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்ற காட்சிகளையும் காணமுடிந்தது. 
நெரிசல்
மாலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள், வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் என பரபரப்பாக மக்கள் சென்று கொண்டிருந்த வேளையில் மழை பெய்ததால் நகரின் முக்கிய இடங்களான பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
நீண்ட நேரம் பெய்த மழையால் மதுரை பைக்காரா பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் வளாகம் மற்றும் அறைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் நோயாளிகள் மற்றும் அங்குள்ள பணியாளர்கள் அவதி அடைந்தனர்.

Next Story