ஆசனூர் அருகே குட்டியுடன் வாகனங்களை வழிமறித்த யானை- போக்குவரத்து பாதிப்பு


ஆசனூர் அருகே குட்டியுடன் வாகனங்களை வழிமறித்த யானை- போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 Sep 2021 11:36 PM GMT (Updated: 17 Sep 2021 11:36 PM GMT)

ஆசனூர் அருகே குட்டியுடன் வாகனங்களை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
ஆசனூர் அருகே குட்டியுடன் வாகனங்களை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகனங்களை வழிமறிக்கும் யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் காரப்பள்ளம் என்ற இடத்தில் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்து குட்டியுடன் யானை சாலையில் வந்து நின்றது.  இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. லாரி உள்ளிட்ட வாகனங்களை சற்று தூரத்திலயே டிரைவர்கள் நிறுத்திக்கொண்டனர்..
இதனால் ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்களை வழிமறித்தபடி குட்டியுடன் யானை ேராட்டில் அங்கும், இங்குமாக உலா வந்தது. சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகே குட்டியுடன் நின்றிருந்த யானை வனப்பகுதிக்கு சென்றது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டன. இதனால் அந்த வழியாக சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஆசனூர் வனச்சாலையில் வாகனங்களை யானைகள் வழிமறிப்பதும், சில நேரம் துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.


Next Story