பா.ஜ.க. பிரமுகர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி பெரியபாளையம் போலீஸ் நிலையம் முற்றுகை


பா.ஜ.க. பிரமுகர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி பெரியபாளையம் போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 18 Sept 2021 6:23 PM IST (Updated: 18 Sept 2021 6:23 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. பிரமுகர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி பெரியபாளையம் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

கைது
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் மெய்யூர் ஊராட்சியை சேர்ந்தவர் செல்வி. (வயது 28). இவர் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் மெய்யூர் ஊராட்சியில் மெய்கண்ட ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 15-ந்தேதி சாமி தரிசனம் செய்ய சென்ற தன்னை மெய்யூர் ஊராட்சி பா.ஜ.க. கிளை தலைவர் வேலு தாக்கி முடியை பிடித்து தரதரவென இழுத்து வந்து கோவிலுக்கு வெளியே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தார் என்று குறிப்பிட்டிருந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முற்றுகை
இநத நிலையில், வேலு மீது பொய்யான புகார் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவிலுக்கு நைட்டி அணிந்து வந்த செல்வியை கண்டிக்க மட்டுமே செய்துள்ளார். அவரை தாக்க வில்லை என்று கூறி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜா தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் பிரகாஷ், எல்லாபுரம் ஒன்றிய தலைவர் சுந்தரம், பூண்டி கிழக்கு ஒன்றிய தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று போலீசாரை கண்டித்தும், வேலு மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ததாக கூறி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உறுதி கூறினார். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.


Next Story