ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சமையல் தொழிலாளி


ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சமையல் தொழிலாளி
x
தினத்தந்தி 19 Sept 2021 12:59 AM IST (Updated: 19 Sept 2021 6:06 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சமையல் தொழிலாளியை தீயணைப்பு படை வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள பெரியபோதுவை சேர்ந்தவர் குமார்(வயது 43). இவர் அம்பராம்பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வழக்கம் போல் ஆழியாற்றுக்கு குளிக்க சென்றார். இதற்கிடையில் நீர்வரத்து அதிகரித்ததால் ஆழியாறு அணையில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தண்ணீர் அதிகமானதால் குமார் பாறையில் ஏறி நின்று கொண்டார். மேலும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். இதையடுத்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு படை வீரர்கள் கரையில் இருந்து குமாரை நோக்கி கயிற்றை வீசினார்கள். அந்த கயிற்றை அவர் இறுக்கமாக பிடித்துக்கொண்டார். பின்னர் லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு தீயணைப்பு படை வீரர்கள் தினேஷ், சவுந்தர்ராஜன் ஆகியோர் ஆற்றில் இறங்கி, கயிறு மூலம் அவரை மீட்டு அழைத்து வந்தனர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்டனர். இதற்கிடையில் குமாரை அழைத்து வந்த தீயணைப்பு படை வீரர் தினேஷ் திடீரென்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற பிறகு பத்திரமாக கரையேறினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


Next Story