தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகள் முகாம்

வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளதால், தொழிலாளர்களுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
வால்பாறை,
வால்பாறை வனப்பகுதிகளுக்கு கேரள வனப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து காட்டுயானைகள் வர தொடங்கி விட்டன. அவை தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து காட்டுயானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
இரவில் தேயிலை தொழிற்சாலை பணிக்கு செல்பவர்களுக்கு எஸ்டேட் நிர்வாகங்கள் வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும். அதிகாலை பணிக்கு செல்பவர்கள் அந்த பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை அறிந்து பணிக்கு செல்ல வேண்டும். தனியாக நடந்து செல்வதை தவிர்ப்பதோடு இருசக்கர வாகனத்தில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
மது அருந்தி விட்டு இரவில் வனப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்கு நடந்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் எந்த எஸ்டேட் பகுதியில் இருந்தாலும் அது குறித்து வனத்துறையினருக்கு உடனே தெரிவிக்க வேண்டும்.
தேயிலை தோட்டங்களுக்கு தொழிலாளர்களை பணிக்கு அனுப்புவதற்கு முன்னால் தேயிலை தோட்ட பகுதிகளை நன்றாக பார்வையிட்டு வனவிலங்குகள் நடமாட்டம் ஏதாவது இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும். காட்டுயானைகளை மக்கள் யாரும் விரட்ட முயற்சி செய்ய வேண்டாம். மேலும் அவைகளை துன்புறுத்த வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






