இறந்தவர் பெயரில் கூட்டுறவு கடன் வழங்கி மோசடி நடந்ததாக வழக்கு
இறந்தவர் பெயரில் கூட்டுறவு கடன் வழங்கி மோசடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
இறந்தவர் பெயரில் கூட்டுறவு கடன் வழங்கி மோசடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பல்வேறு முறைகேடுகள்
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊத்துமலையை சேர்ந்த நிறைகுளத்தான், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:&
ஊத்துமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக சங்கத்தலைவர் செயலாளர், நிர்வாகக்குழு உறுப்பினர் உள்பட பலர், விவசாயிகளின் நலனுக்கு எதிராக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுசம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் செய்தோம்.
இதனால் இந்த சங்கத்தை ஏன் கலைக்கக்கூடாது? என்று நெல்லை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசில் கடைசியாக நடந்த ரூ.3 கோடியே 62 லட்சம் முறைகேடு தொடர்பாக மட்டும் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. ஆனால் 10 ஆண்டுகளாக இந்த சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்தது பற்றி கேள்வி எழுப்பவில்லை.
இறந்தவர் பெயரில் கடன்
அதாவது, இறந்துபோனவர் பெயரில் கடன் கொடுத்தது, பலருக்கு கடன் வழங்கியதாக சங்க பணத்தை கையாடல் செய்தது, கடன் கேட்டு வரும் விவசாயிகள் பெயரில் அவர்கள் கேட்கும் தொகையை விட கூடுதலாக கடன் தொகையை எழுதி, அதில் கூடுதல் தொகையை கையாடல் செய்தது, கிராம நிர்வாக அதிகாரியின் முத்திரையை போலியாக தயாரித்து, போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டது என ஏராளமான மோசடிகள் நடந்துள்ளன.
சங்கச்செயலாளர் தனது மனைவி பெயரில் பல கோடி ரூபாய் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். எனவே ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் சங்கத்தில் பயிர்க்கடன் தள்ளுபடியானபோது போலி ஆவணங்கள் மூலம் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர், என்று வாதாடினார்.
விசாரணை முடிவில் இந்த வழக்கு குறித்து கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை செயலாளர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 6 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story