மின்பாதை திட்டத்துக்கு நில உரிமையாளர் அனுமதி தேவையில்லையா
நில உரிமையாளர்களின் அனுமதியின்றி மின்பாதை அமைக்கலாம் எனும் மின்வாரிய சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானதாக அறிவிக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
நில உரிமையாளர்களின் அனுமதியின்றி மின்பாதை அமைக்கலாம் எனும் மின்வாரிய சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானதாக அறிவிக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
உயர்அழுத்த மின்கோபுரங்கள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ரகுபதி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் 44 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது
ஒட்டன்சத்திரம், பூசாரிபட்டி, கள்ளிமந்தியம், மந்தவாடி, பருத்தியூர், சிக்கமநாயக்கன்பட்டி, பாலப்பன்பட்டி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கணபதிபாளையம், பாடியூர் பகுதிகளில் எங்களுக்கு விவசாய நிலங்கள் உள்ளன.
தற்போது இந்த நிலங்கள் வழியாக விருதுநகரில் இருந்து கோவைக்கு உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இந்த திட்டத்திற்காக எங்கள் நிலத்தை கையகப்படுத்த உள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
உயர் அழுத்த மின்சாரம் இந்த வழியாக கொண்டு செல்லும்பட்சத்தில் இப்பகுதி குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படுவார்கள்.
அனுமதி பெற தேவையில்லை
இதுஒருபுறம் இருக்க, எங்கள் நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்வது குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலோ, நோட்டீசோ அளிக்கவில்லை.
இதுகுறித்து கேட்டபோது, உயர்அழுத்த மின்பாதை அமைக்க நில உரிமையாளர்களிடம் முன் அனுமதி பெற தேவையில்லை என்று மின்வாரிய சட்டம், தகவல் தொடர்பு சட்டம் ஆகியவை கூறுகின்றன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மின்பாதை அமைக்கும்போது கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீட்டு தொகையை குறிப்பிட்ட நாளுக்குள் வழங்க வரையறை செய்யப்படவில்லை. இது சட்டத்துக்கு புறம்பானது.
அரசியலமைப்புக்கு எதிரானது
எனவே எங்கள் நிலத்தின் வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் உரிய இழப்பீடு வழங்கும் சட்டத்தை முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும். நிலத்தை பயன்படுத்தும்போது அந்த நிலத்துக்கு சொந்தமானவர்களிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்ற சட்டங்களை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்து மத்திய எரிசக்தி துறை அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story