சென்னையில் முககவசம் அணியாத 1,163 பேர் மீது வழக்கு
கொரோனா 3-வது அலையை தடுக்கும் நடவடிக்கையாக முககவசம் அணியாதவர்கள் மீது அபராத நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முககவசம் கட்டாயம்
கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் பேராயுதமாக தடுப்பூசிகள் இருந்தாலும், தொற்றில் இருந்து தப்பிக்க முககவசம் அவசியமாக இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் முககவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
அதன்படி கொரோனா முதல் மற்றும் 2-வது அலை தீவிரமாக இருந்த நேரத்தில் முககவசம் அணியாமல் வெளியே வந்தவர்களை போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் மடக்கி பிடித்து அபராதம் வசூலித்து வந்தனர்.
10 ரூபாய் முககவசம் அணியாததற்கு ரூ.200 அபராதம் செலுத்த வேண்டியதை எண்ணி முககவசம் அணிபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைய தொடங்கிய பின்னர், முககவசம் அணிவதில் மக்களிடம் அலட்சியம் ஏற்பட்டுள்ளது. அபராத நடவடிக்கையும் கண்துடைப்பாக போனது.
தீவிர கண்காணிப்பு
இந்தநிலையில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பதால், 3-வது அலை பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் முககவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது மீண்டும் அபராத வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 200 கண்காணிப்பு குழுவினர் முக்கிய சந்திப்புகளில் போலீசாருடன் இணைந்து முககவசம் அணியாதவர்களை கண்காணித்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.
போலீசாரும் தனியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் முககவசம் அணியாத குற்றத்துக்காக ஒரே நாளில் 1,163 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
போலீசார் வேண்டுகோள்
தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று சென்னை போலீசார் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி வரும் நாட்களில் முககவச சோதனை தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story