மாங்காடு அருகே கழிவுநீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை


மாங்காடு அருகே கழிவுநீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 19 Sept 2021 3:44 PM IST (Updated: 19 Sept 2021 3:44 PM IST)
t-max-icont-min-icon

மாங்காடு அடுத்த பட்டூர், புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் பர்கித்பீவி (வயது30) இவருக்கும் பட்டூர் தீன் நகரை சேர்ந்த இதாயத் உசேன் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சமீப காலமாக இதாயத் உசேன் அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த பர்கித்பீவி கோபித்து கொண்டு சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன் தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை பர்கித்பீவியின் தாய் மரியம்பீவி (66) எழுந்து வெளியே வந்தார். அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் இருந்தது. உள்ளே எட்டி பார்த்த போது அங்கு பர்கித்பீவி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த பர்கித்பீவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் பர்கித்பீவியின் கணவர் இதாயத் உசேனை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆன நிலையில் உயிரிழந்துள்ளதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகி ஒரே ஆண்டில் கழிவுநீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Next Story