குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு
குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கிணத்துக்கடவு,
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறையில் உள்ள சக்தி எஸ்டேட் மற்றும் வனப்பகுதியில் உருவாகும் சிறு ஓடைகள் மூலம் நீர்வரத்து இருக்கிறது.
இதில் குளிக்க கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 2-ந் தேதி குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியது.
இந்தநிலையில் விடுமுறை நாட்களில் குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். அதன்படி நேற்றும் காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க குவிந்தனர். பின்னர் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து வால்பாறை வனப்பகுதியில் மழை பெய்ததால் மாலை 4 மணியளவில் திடீரென குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் மற்றும் ஆழியாறு போலீசார் உடனடியாக குளித்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகளை வெளியேற்றினர். இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சிறிது நேரத்தில் குரங்கு நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, காட்டாற்று வெள்ளம் போல தண்ணீர் சீறிபாய்ந்து ஓடியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழி மூடப்பட்டது.
Related Tags :
Next Story