வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வால்பாறை,
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. எனினும் மாநிலத்திலேயே கோவை மாவட்டத்தில்தான் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை திறக்க தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை கலெக்டர் விதித்து உள்ளார்.
ஆனால் நேற்று வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அங்கு கூழாங்கல் ஆற்று பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு தடை விதித்து திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
ஆனால் நீரார் அணைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் நல்லமுடி, பூஞ்சோலை, சோலையாறு அணை பகுதிக்கும் சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர். கட்டுப்பாடுகள் குறித்து தகவல் சரியாக தெரியாததால், பெரும்பாலான கடைகள் திறப்பட்டு இருந்தன. மேலும் சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சிலர் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் முறையின்றி நிறுத்தி வைத்திருந்ததாலும், அதிகப்படியான வாகனங்களின் வரத்து காரணமாகவும் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரை அதிகளவில் நியமிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story