மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறப்பு


மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறப்பு
x
தினத்தந்தி 19 Sept 2021 10:02 PM IST (Updated: 19 Sept 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. மேலும் தியேட்டர்கள், கோவில்கள் மூடப்பட்டன.

கிணத்துக்கடவு,

கோவை மாவட்டத்துக்கு அருகில் கேரள மாநிலம் உள்ளது. மேலும் அங்கு தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் கேரள மாநிலத்தின் அருகே உள்ளதால் கோவை மாவட்டத்துக்கு கேரளாவில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் கோவை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையொட்டி கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் மளிகை, காய்கறி, பால், மருந்தகம் ஆகிய அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் ஓட்டல்களில் பார்சல் வாங்கி சென்றனர். 

இதேபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படும் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் தியேட்டருக்கு வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரும்பாலான பகுதிகளில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடிக்கிடந்தது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

இது தவிர ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில், கிணத்துகடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவில்களும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் வழக்கம்போல் கோவில்களில் பூஜைகள் மட்டும் நடைபெற்றன.


Next Story