கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கோவை மாவட்டம் முதலிடம்
முதல் மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசு நிதியின் கீழ் ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி முனையம் மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் ரூ.85 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி முனையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி முனையங்களை மருத்துவ பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதையடுத்து மெகா தடுப்பூசி முகாமையும் தொடங்கி வைத்தார். பின்னர் கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை அமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதையும், அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பூசி முகாமையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அந்த வாகனத்தில் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்யாமல் மற்றும் தடுப்பூசி செலுத்தாமல் வந்தது தெரியவந்தது. உடனே அந்த வாகனத்தை கேரளாவிற்கு திருப்பி அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- தமிழகத்தில் 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ‘20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி‘ என்ற இலக்குடன் தொடங்கியது. கடந்த வாரம் 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்ற நோக்கத்தில் முகாம் நடத்தப்பட்டதில், 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இன்றைய நிலையில் 16 லட்சம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பு உள்ளது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கி வைக்கப்படும் ஆக்சிஜன் உற்பத்தி முனையங்கள் மூலம் 160 உள்நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஆக்சிஜன் வழங்கி சிகிச்சை அளிக்க முடியும். ஆக்சிஜன் உற்பத்தி செய்வதால் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும்.
தமிழகத்தில் கொரோனா 3&வது அலை வராது. வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டத்தில் மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 19 ஆக்சிஜன் உற்பத்தி முனையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
எனவே ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலை இல்லாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு வரை 4 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரத்து 900 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன. கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட சதவீத அடிப்படையில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 29 லட்சத்து 27 ஆயிரத்து 149 பேர் உள்ள நிலையில், 22 லட்சத்து 4 ஆயிரத்து 631 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. முதல் தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கு போடப்பட்டு உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 7 லட்சத்து 18 ஆயிரத்து 335 பேருக்கு போடப்பட்டு உள்ளது. இது 25 சதவீதமாகும். முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியதில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் தினசரி தொற்று பாதிப்பு சராசரியாக 200-க்கு குறையாமல் கண்டறியப்பட்டு வருகிறது.
மேலும் கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவில் இருந்து வருபவர்களில் கொரோனா நெகட்டிவ் சான்று மற்றும் இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்று உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
கேரளாவில் ஜிகா, நிபா வைரஸ் தொற்றுகள் பரவிய நிலையில் தமிழக-கேரள எல்லையோரத்தில் உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ரூ.10 கோடி மதிப்பில் குழந்தைகள் நல சிகிச்சை மையம் கட்டப்பட்டு வருகின்றன. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டியில் இருந்து ராசக்காபாளையம் வரை நேற்று காலை 4.30 மணிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓட்ட பயிற்சி மேற்கொண்டார். சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை அவர் ஓடி சென்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், பொது சுகாதாரம் நோய் தடுப்பு மற்றும் மருத்துவ துறை இயக்குனர் செல்வநாயகம், சப்&கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story