பீடா கடையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது


பீடா கடையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2021 10:52 PM IST (Updated: 19 Sept 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

பீடா கடையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

கோவை

கோவையில் பீடா கடையில் நூதன முறையில் போதை மாத்திரை விற்ற 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல் 

கோவையில் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்து போதைபொருள் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோரை போலீசார் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் கோவை ராஜவீதியில் உள்ள ஒரு பீடா விற்பனை செய்யும் கடையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கி விற்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 இதையடுத்து ஆர்.எஸ்.புரம்உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, போலீஸ்காரர்கள் உமா, கார்த்தி, பூபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். 

2 பேர் கைது 

அப்போது அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பதுக்கி பீடாவுக்கு அடியில் மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அங்கே இருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பீகாரை சேர்ந்த நேமராம் (வயது 51) என்பதும், அந்தப்பகுதியில் பீடா கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தேனி தேவாரம் பகுதியை சேர்ந்த முருகன் (58) என்பவர் கஞ்சா சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நேமராம் மூலம் போலீசார் முருகனை கோவை வரவழைத்தனர்.

 பின்னர் தனிப்படையினர் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா மற்றும் 50 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். 
இது குறித்து போலீசார் கூறியதாவது:-

நூதன முறையில் விற்பனை 

நேமராம் தனது பீடா கடையில் ஐஸ் பீடா, சுவீட் பீடா, வகைகளை பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறார். அதில் போதிய லாபம் கிடைக்காததால், போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்றால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என்று நினைத்து வடமாநில வாலிபர்களை குறிவைத்து அவற்றை விற்பனை செய்து உள்ளார். 

இதற்காக கஞ்சாவை முருகனிடம் இருந்து வாங்கி பீடா பொட்டலத்துக்கு அடியில் மறைத்து வைத்து கஞ்சாவை ரூ.1000 வரை விற்று இருக்கிறார். அவருக்கு போதை மாத்திரை சப்ளை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story