கோவையில் 94723 பேருக்கு கொரோனா தடுப்பூசி


கோவையில் 94723 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 19 Sept 2021 10:59 PM IST (Updated: 19 Sept 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் 706 இடங்களில் நடந்த முகாமில் 94,723 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கோவை

கோவையில் 706 இடங்களில் நடந்த முகாமில் 94,723 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

மெகா தடுப்பூசி முகாம்

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசியை பொதுமக்களுக்கு விரைந்து செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அருகே உள்ள நீலகிரி மாவட்டம் முதல் டோஸ் தடுப்பூசியை 100 சதவீத அளவில் செலுத்தி சாதனை படைத்து உள்ளது. 

எனவே கோவையிலும் இந்த இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 685 பேருக்கு தடுப்பூசி செலுத்தி மாநில அளவில் 2-வது இடத்தை கோவை மாவட்டம் பிடித்தது. 

706 முகாம்கள் 

அதன் தொடர்ச்சியாக  கோவை மாவட்டத்தில் மேலும் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கோவை வ.உ.சி.மைதானம், அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு பள்ளிக்கூடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 706 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இந்த முகாமில் கோவேச்சின் மற்றும் கோவிஷீல்டு என இரு தடுப்பூசிகள் போடப்பட்டன. பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் இரு தடுப்பூசிகளின் முகாம்களும் தனித்தனியாக நடந்தது. முகாம் முன்பு அந்த தடுப்பூசிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடைபெற்றது.

குளிர்பானம் கொடுத்து வரவேற்பு

இதில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் பெறும் வகையில், உடனடியாக அங்கேயே ஆதார் மற்றும் செல்போன் எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

பின்னர் அவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்த பின்னர் அவர்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஒரு சில முகாம்களில் மதியத்துக்கு தடுப்பூசிகள் தீர்ந்தன. இதையடுத்து அருகே உள்ள மையங்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கோவை வ.உ.சி. மைதானத்தில் உள்ள முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்களுக்கு குளிர்பானம் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தடுப்பூசி செலுத்திய பிறகு அங்கு அமர்ந்து குடித்தனர். 

ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர் 

மேலும் முகாம்களுக்கு கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வந்த முதியவர்களை அலைக்கழிக்காமல் அவர்கள் நின்ற இடத்துக்கே நர்சுகள் சென்று தடுப்பூசி செலுத்தினார்கள். இதுபோன்று சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு வந்த மாற்றுத்திறனாளிளுக்கும் முகாம் வெளியே வைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

கோவையில் நடந்த முகாமில் 94,723 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

Next Story