காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் பணிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் பணிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 20 Sept 2021 4:21 PM IST (Updated: 20 Sept 2021 4:21 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் பணிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து, வாக்குச்சாவடிகளில், சாய்தளம், குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் கழிவறை வசதிகள் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், வாக்குப்பதிவு மையத்திற்கு தேவையான வாக்குப்பதிவு பொருட்கள் வந்தடைந்ததை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குச்சாடிக்கு வருகை தர வேண்டும்.
வாக்குப்பதிவு அன்று காலை 6 மணிக்கு பணியில் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் அன்று காலையில் தேர்தல் பொருட்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், வாக்குப்பெட்டிகள் காலியாக இருப்பதை அனைவருக்கும் காண்பித்து உறுதி செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

வாக்குப்பெட்டி தயார் செய்தலுக்கான அனைத்து சீட்டுக்களையும் சரிபார்க்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் தனித்தனி வரிசையில் நிற்க வைக்க வேண்டும். 3-ம் பாலினத்தவர்கள் அவர்கள் விரும்பும் வரிசையில் வர அனுமதிக்கலாம். மேலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வரிசையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வாக்குச்சாவடியில் ஒரே நேரத்தில் 3 அல்லது 4 வாக்காளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையத்தில் கைபேசியில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. வாக்குச்சாவடி மையத்தில் 100 மீட்டர் எல்லை குறியீட்டை சரிபார்த்து, 200 மீட்டர் இடைவெளிக்கு அப்பால் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர் பெயர் அல்லது சின்னம் தாங்கிவரும் பேட்ச்கள் அனுமதி இல்லை. பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்களுடன் 18 வயது நிரம்பிய துணை நபர் ஒருவரை அனுமதிக்கலாம்.வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து மையங்களிலும், அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். முககவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் மற்றும் கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் மூடி முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியை பார்வையிட்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ஸ்டீபன் ஜெயச்சந்திரா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story