மண் சாலையை கிராம மக்கள் சீரமைத்தனர்


மண் சாலையை கிராம மக்கள் சீரமைத்தனர்
x
தினத்தந்தி 20 Sept 2021 7:52 PM IST (Updated: 20 Sept 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

மண் சாலையை கிராம மக்கள் சீரமைத்தனர்

கூடலூர்

எல்லமலை- திருவள்ளுவர் நகர் இடையே மண் சாலையை கிராம மக்கள் சீரமைத்தனர்.

பொதுமக்கள் அவதி

கூடலூர் தாலுகா பகுதியில் முடிவு செய்யப்படாத சட்டப்பிரிவு& 17ன் கீழ் நிலம் உள்ளது. இதில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஓவேலி பேரூராட்சி பகுதியில் சட்டப்பிரிவு- 17 நிலம் உள்ளதால் பல இடங்களில் சாலை அமைக்கப்பட வில்லை. இதனால் பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலையில் இருந்து திருவள்ளுவர் நகர் வழியாக ஆரோட்டுபாறைக்கு மண் சாலை செல்கிறது.

இந்த சாலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு குண்டும், குழியுமாக கிடக்கிறது. மழை காலங்களில் சேறும் சகதியுமாக யாரும் செல்ல முடியாத அளவுக்கு மாறி விடுகிறது. 

இதனால் அவசர காலங்களில் நோயாளிகள் கர்ப்பிணிகளை வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவதில்லை. 

நோயாளிகளை தோளில் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலையை சீரமைத்த கிராம மக்கள்

எனவே அந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.

 ஆனால் அந்த சாலை உள்ள இடம் சட்டப்பிரிவு 17 நிலத்தில் வருவதால் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ள முடியாது என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து எல்லமலையில் இருந்து திருவள்ளுவர் நகருக்கு இடையே உள்ள மண் சாலையை கிராம மக்களே ஒன்று சேர்ந்து சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.  அவர்கள் பள்ளங்கள் உள்ள இடத்தில் கற்களை போட்டு சீரமைத்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எல்லமலையில் இருந்து திருவள்ளுவர் நகருக்கு சாலை அமைத்து தர வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்து விட்டோம். ஆனால் சட்டப்பிரிவு 17-ன் கீழ் வருவதால் சாலை அமைக்க முடியாது என அதிகாரிகள் கூறுகிறார்கள். 

எனவே அனைவரும் ஒன்றிணைந்து தற்காலிகமாக மண் சாலையை சீரமைத்து வருகிறோம். இருந்தாலும் மக்கள் நலன் கருதி சாலை அமைத்து தர வேண்டும் என்றனர்.
1 More update

Next Story