100 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
மின் மயமாக்கல் பணி
போத்தனூர்-பொள்ளாச்சி இடையேயான ரெயில்பாதையை மின் மயமாக்க ரூ.37 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்கு 906 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மின் கம்பங்களும் 400 கிலோ எடையும், 9.5 மீட்டர் உயரமும் உள்ளன.
மேலும் கிணத்துக்கடவு, செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் 2 சுவிட்ச் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து மின் மயமாக்கல் பணிகள் நடந்து நிறைவடைந்தன.
இதற்கிடையில் கடந்த 1-ந்தேதி போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் 25 கிலோ வாட் மின்சாரம் செலுத்தப்பட்டு மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது. சோதனை ஓட்டத்தின் முடிவில் எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது தெரியவந்தது.
ரெயிலை இயக்கி சோதனை
இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபேக் குமார் ராய் ஆய்வு மேற்கொண்டார். டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரெயிலில் போத்தனூரில் இருந்து காலை 9.35 மணிக்கு பொள்ளாச்சிக்கு புறப்பட்டார்.
வரும் வழியில் ரெயில்வே கேட்கள் மற்றும் மின்சார கம்பிகள் சரியான உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளதா?, பாலத்திற்கும் மின்கம்பிகளுக்கும் இடையே உள்ள தூரம் என்ன? ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மதியம் 12.45 மணிக்கு பொள்ளாச்சிக்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு, மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு ரெயிலுக்கு வாழை மரங்கள் கட்டப்பட்டன. இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து மாலை 3 மணிக்கு ரெயில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சராசரியாக 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.
போத்தனூருக்கு மாலை 3.38 மணிக்கு ரெயில் சென்றடைந்தது. ஆய்வின் போது கோட்ட மேலாளர்கள் ஸ்ரீனிவாஸ் (சேலம்) , திரிலோக் கோத்தாரி (பாலக்காடு) மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் மின்சார ரெயிலை இயக்கி சராசரியாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு அறிக்கை அளித்த பின், ரெயில்களை இயக்குவது குறித்து ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்யும் என்றனர்.
Related Tags :
Next Story