வாழை இலையில் உணவு சாப்பிட்ட பக்தர்கள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடந்த அன்னதானத்தில் வாழை இலையில் பக்தர்கள் உணவு சாப்பிட்டனர்.
பொள்ளாச்சி
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடந்த அன்னதானத்தில் வாழை இலையில் பக்தர்கள் உணவு சாப்பிட்டனர்.
திட்டத்தில் மாற்றம்
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அன்னதான திட்டத்தில் பந்தியில் வாழை இலை மூலம் உணவு பரிமாற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக உணவு பொட்டலமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி அன்னதான திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வாரத்தில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பந்தியில் வாழை இலையில் உணவு பரிமாறப்படும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உணவு பொட்டலமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாழை இலையில் உணவு
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று பக்தர்களுக்கு பந்தியில் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. இதை கோவில் உதவி ஆணையர் கருணாநிதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஒரு பந்திக்கு 50 பேர் வீதம் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
அப்போது கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதேபோன்று பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பந்தியில் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. பல மாதங்களுக்கு பிறகு இலையில் உணவு சாப்பிட்டதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story