ரேஷன் கடைகளை சூறையாடும் காட்டுயானைகள்
வால்பாறையில் ரேஷன் கடைகளை சூறையாடி காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் ரேஷன் கடைகளை சூறையாடி காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காட்டுயானைகள் கூட்டம்
வால்பாறை வனப்பகுதிகளுக்கு கேரள வனப்பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக தமிழக&கேரள எல்லையில் உள்ள எஸ்டேட் பகுதிகளை சுற்றி குட்டிகளுடன் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இவை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளையும், ரேஷன் கடைகளையும் குறித்து வைத்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் முடீஸ் பஜார் பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 5 யானைகள் கொண்ட கூட்டம் ரேஷன் கடையை உடைத்து அரிசியை தின்றன. மேலும் பொருட்களை சேதப்படுத்தி விட்டு, அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல்களையும் உடைத்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.
தூக்கமின்றி தவிப்பு
ஏற்கனவே காட்டுயானைகள் ரேஷன் கடைகளை உடைத்து அட்டகாசம் செய்து உள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இரவில் அச்சத்துடன் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.
இதற்கு காரணம், எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு பகுதிக்குள்தான் இருந்து வருகிறது. இதனால் ரேஷன் கடைகளை குறி வைத்து சூறையாட வரும் காட்டுயானைகள், அருகில் உள்ள தொழிலாளர்கள் வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. அப்போது தொழிலாளர்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி உயிர் தப்புகின்றனர்.
கூடுதல் ஊழியர்கள்
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-
தினமும் காட்டுயானைகள் தொல்லையால் பீதியுடன் வாழ வேண்டி உள்ளது. இனிமேலும் இது தொடர்ந்தால், காட்டுயானைகளிடம் சிக்கி உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல்வேறு எஸ்டேட் பகுதியில் செல்போன் சேவை கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இதனால் காட்டுயானைகள் குடியிருப்புக்குள் நுழைவதை வனத்துறையினருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்து வருகிறோம்.
காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பல்வேறு வனச்சரகங்களில் இருந்து கூடுதல் ஊழியர்களை வாகன வசதிகளுடன் கண்காணிப்பு பணிக்கு ஈடுபடுத்த வேண்டும். இதுபோன்று உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தால் இரவில் காட்டுயானைகளால் ஏற்படும் பயமும், அச்சமும் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story