பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் குளறுபடி; கலெக்டரிடம் மனு


பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் குளறுபடி; கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 Sept 2021 11:56 PM IST (Updated: 20 Sept 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பினர் கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பினர் கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற  தலைவர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திரண்டனர். 

இதற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுரிகாசிநாதன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் மோகன், தொற்கு மாவட்ட தலைவர் கணேசன், வடக்கு மாவட்ட தலைவர் குப்புசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். 

இவர்களில் 10 பேரை மட்டுமே கலெக்டரை சந்திக்க அனுமதிக்க முடியும் என்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் நாங்கள் அனைவரும் கலெக்டரை சந்திக்க வேண்டும் என்று ஒன்றாக இணைந்து கூறி தரையில் அமர்ந்தனர். 

பின்னர் போலீசார் தெரிவித்தும் அவர்கள் கலெக்டர் அறைக்கு சென்றனர். கலெக்டர் அறையின் அருகே சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊராட்சி மன்ற தலைவர்களில் சிலர் மட்டும் கலெக்டரை சந்திக்க அவரது அறைக்குள் சென்றனர்.
திட்டத்தில் குளறுபடி

பின்னர் அவர்கள் தங்களின் கோரிக்கை மனுவை கலெக்டர் முருகேஷிடம் அளித்து விட்டு கூறுகையில், பிரதமர் இலவச வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளை உரிய முறையில் பொதுமக்களுக்கு அறிவிக்காமல் மனுக்கள் பெறப்பட்டு மாநில ஊரக வளர்ச்சி முகமை மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் மனுவை பெறுவதில் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த வீடு கட்டும் திட்டத்தில் பழைய பயனாளிகள் பட்டியலை வைத்து பயனாளிகளை தேர்வு செய்வதை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் புதிய பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்ய வேண்டும் என்றனர்.
 
மேலும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் அதிகாரம் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்க வேண்டும். 
இதில் முறைகேடுகளில் ஈடுபடும் ஊராட்சி மன்ற செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story