ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் தர ஆய்வு செய்யப்படும் ஈரோட்டில் அமைச்சர் -சு.முத்துசாமி பேட்டி


ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் தர ஆய்வு செய்யப்படும் ஈரோட்டில் அமைச்சர் -சு.முத்துசாமி பேட்டி
x
தினத்தந்தி 21 Sept 2021 3:00 AM IST (Updated: 21 Sept 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் தர ஆய்வு செய்யப்படுவதாக ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு
ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் தர ஆய்வு செய்யப்படுவதாக ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
தூர்வாரும் பணி
ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் ஈரோடு காசிபாளையம் ஓடையை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தூர்வாரும் பணியை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைக்காலம் தொடங்க உள்ளதால் மழைநீர் தேங்காத வகையில் ஓடைகளை தூர்வாரி சுகாதார பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி முதல்கட்டமாக ஈரோடு காசிபாளையம் ஓடையை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மற்ற ஓடைகள், கால்வாய்கள் தூர்வாரப்படும். 
தர ஆய்வு
ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக 85 பெரிய திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது. குறிப்பாக ஈரோடு சோலார், அறச்சலூர், கனிராவுத்தர் குளம் ஆகிய பகுதிகளில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டில் 5 அல்லது 6 மேம்பாலங்கள் கட்டுவதற்கு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் தர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன் கட்டிட உறுதித்தன்மையில் குறைபாடு இல்லை. ஆனால் கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதியில் குறைபாடு கண்டறியப்பட்டது. அது விரைவில் சரி செய்யப்படும். கடந்த ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் பயனாளிகள் ஒரு வீட்டுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1லட்சத்து 25 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். சில பயனாளிகள் அந்த தொகையை செலுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு சுலப தவணை கடன், வங்கி கடன் ஏற்பாடு செய்து தரப்படும்.
வீட்டுமனை பட்டா
கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்களில் முறைகேடு நடந்துள்ளதா? என்று ஆய்வு நடக்கிறது. உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஈரோடு அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் 85 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அந்த இடம் கரடு, மேடாக உள்ளதால் சமன் செய்வதற்கு வெடி வைக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அருகில் குடிசை மாற்று வாரியம் மூலமாக கட்டப்பட்ட வீடுகள் இருப்பதால், அதற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த தாலுகாவிலேயே வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் ஓடையோரமாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது. எனவே மாற்று இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கணேசமூர்த்தி எம்.பி., ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் அக்னி சின்னசாமி, செயலாளர் சாரல் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story