டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் கலெக்டரிடம் உரிமையாளர்கள் கோரிக்கை மனு


டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் கலெக்டரிடம் உரிமையாளர்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 21 Sept 2021 3:43 AM IST (Updated: 21 Sept 2021 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பார் உரிமையாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பார் உரிமையாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
டாஸ்மாக் பார்கள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாததால், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கும் வகையில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றார்கள்.
ஈரோடு மாவட்ட மதுபானக்கூட திண்பண்ட பொருட்கள் விற்பனையாளர்கள் நலச்சங்க தலைவர் சந்திரசேகர், செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதில் 160 இடங்களில் பார்கள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக இட வாடகை, மின் கட்டணம், பணியாளர்கள் சம்பளம் என வருமானமின்றி செலவு செய்து வருகிறோம். எனவே எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் பார்களை விரைவில் திறக்க வேண்டும். மேலும், உரிமை தொகையை குறைத்து வழங்க ஆவண செய்ய வேண்டும். பார்கள் திறக்கப்பட்டால், சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக குடிமகன்கள் நின்று கொண்டு மது அருந்துவது தவிர்க்கப்படும். பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டால், அரசு அறிவிக்கும் விதிமுறைகளை பின்பற்றி சுகாதாரமான முறையில் பார்களை நடத்துவதற்கு தயாராக உள்ளோம். எனவே பார்களை திறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
குரங்கன் ஓடை
மொடக்குறிச்சி அருகே ஆனந்தம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறிஇருந்ததாவது:-
சென்னிமலையில் இருந்து ஊஞ்சலூர் வரை குரங்கன்ஓடை செல்கிறது. மழைநீரும், கசிவுநீரும் இந்த ஓடையில் செல்வதால் நிலத்தடி நீராதாரம் மூலமாக விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது. மேலும், ஆனந்தம்பாளையம், செல்லாத்தாபாளையம், குலவிளக்கு, எழுமாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் குரங்கன்ஓடையை ஒட்டி உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க சிலர் நிலம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், குளிர்பான தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. எனவே குரங்கன்ஓடை பகுதியில் புதிதாக தொழிற்சாலை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
ஆக்கிரமிப்பு
அவல்பூந்துறை அம்பேத்கர்நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
அம்பேத்கர்நகர் பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் விளையாட்டு திடல் உள்ளது. அதனை சில பெண்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். இதுபற்றி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்து எச்சரிக்கை விடுத்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
இந்தநிலையில் அங்கு குடிசைகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story