ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும்
ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும்
ஊட்டி
ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என்று தேசிய ஆணைய தலைவர் கூறினார்.
தேசிய ஆணைய தலைவர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தலில் ஆடு, மாடு வதைகூட பகுதி மற்றும் ஓல்டு ஊட்டியில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேற்று வந்தார். அவர், அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என்று கேட்டறிந்தார்.
அவரிடம், ஓல்டு ஊட்டியில் போதுமான கழிப்பிட வசதி இல்லை என்று தூய்மைப் பணியாளர்கள் கூறினர். உடனே அவர் அங்குள்ள கழிப்பறையை பார்வையிட்டு தண்ணீர், மின் இணைப்பு போன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையாளரிடம் அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதற்கு ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம், ஊட்டி சப் கலெக்டர் மோனிகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அதில் நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கூறி மனு அளித்தனர்.
ஒப்பந்தம் ரத்து
பின்னர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது
ஊட்டியில் 2 இடங்களில் ஆய்வு செய்தேன். சிறந்த நகராட்சி விருது பெற்ற ஊட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு வசதி இல்லை. அங்கு மின் இணைப்பு, கதவு இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பளம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு தொடர்பாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பலர் புகார் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மாவட்ட அளவில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
தூய்மை பணியாளர்கள் கூறும் புகார்களில் உண்மை இருந்தால் சம்மந்தப்பட்ட ஒப்பந்தாரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். நீலகிரியில் உள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களிடம் விசாரிக்க வேண்டும்.
பணியாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்காதது, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் இருக்கும் ஒப்பந்ததாரைர கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து உள்ளேன்.
தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும். அப்போது தான் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும்.
குழு அமைக்க வேண்டும்
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பாதிப்புகளை கேட்டறிய தமிழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் 7 மாநிலங்களில் ஆய்வு செய்தேன்.
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை இல்லை என்று தெரிவிக்கின்றனர். குறைகளை கூறும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.
அவர்கள் புகார்களை கூற பயப்படுகின்றனர். கொரோனா காலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story